சிரித்திரன் சில வரிகள்

முன்னுரை :

ஒரு தேசத்தின் முக்கிய சொத்து அதன் மக்களும் அவர்களது மொழியும் பண்பாடும்தான் . தன்னுடைய நிலத்தின் வரலாறை நிகழை தெரிந்திருக்காதவர்கள் அந்த நிலத்தில் இருந்தும் அந்த நிலத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களே உலகம் முழுக்க கதைகள்தான் ஒரு நிலத்தின் வரலாறை அதன் பண்பாட்டை அதனுடைய மொழியை கண்ணிகள் அறாது தலைமுறையாய் கடத்துகின்றன.

நமது இலக்கியங்களும், பத்திரிகைகளும் நமது வரலாற்றை வியந்து கொள்ள, வாசித்து தெரிந்து கொள்ளவாவது உதவ வேண்டும்.எமது வாழ்வியலையும், ஈழ நாட்களையும் , அரசியல் சூட்சுமங்களையும் பகடிகளுடனும் , சுவாரசியமாகவும் , தார்மீகமான அறத்தின் குரலில் மக்கள் இலகுவாக வாசிக்குமாறு செய்து ஈழ இலக்கிய வரலாற்றில் செய்த ஒரே இதழ் “சிரித்திரன்”தான். அத்தோடு ஈழ இலக்கிய வரலாற்றில் முதல் cartoon சஞ்சிகையும், கார்ட்டூன் என்பதற்கு ஆழம்மிக்க அழகிய தமிழான கருத்தூண் என பொறித்துத் தந்ததும் சிரித்திரனே..

யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த சிரித்திரன் சுந்தரால் ஆரம்பித்து நாடாத்தப்பெற்ற இவ்விதழ் அன்னாரின் மறைவின் பிபின்னரான பல வருட இடைவெளிகளின் பின்னர் Centre for Creativity and Innovation நிறுவனத்தால் மீளவும் தொடங்கப்பட்டு 2021 சனவரியிருந்து இலங்கை மட்டுமல்லாமல் உலகெங்கும் கிடைக்க கூடிய வகையில் அச்சுப்பிரதியாகவும், மின் பிரத்தியாகவும் வெளியிடப்பட்டு Iவருகின்றது.


நிறுவனம் :

இத்தகைய வரலாற்றுப் புகழ் வாய்ந்த சிரித்திரன் சஞ்சிகையை யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கி வரும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வளர்ச்சியகம் மீள் வெளியீடு செய்துவருகின்ற இந்நிறுவனமானது ஒரு சமூக நிறுவனமாகும். "அடுத்த 100 ஆண்டுகளுக்கான முன்னேற்றம்" என்ற தொனிப்பொருளில் சமுதாயத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றது. முதலில் யாழ்ப்பாணம் வடமாகாணத்தை மைய பிரதேசமாக கொண்டும் பின்பு இலங்கை முழுவதிலும் தனது சேவைகளை ஆற்றி வருகிறது. புத்தாக்கம், பொருளாதாரம், சமூக மேம்பாடு, கல்வி மிதிவண்டி மற்றும் ஆரோக்கியம், சுற்றுலாத்துறை வளர்ச்சி, முயற்சியாண்மை, இலக்கியம் போன்ற பல்துறை சேவைகளை மிக வினைத்திறனுடன் ஆற்றி வருகின்றது. இந்த நிறுவனத்தின் தலைவராக திரு. சுரேஷ் கணபதி அவர்களும் பிரதித் தலைவராக திரு.செல்வராசா நந்தகோபால் அவர்களும் செயல்படுகிறார்கள்.


செயல்பாடுகள் :

தனது சேவையினை முனைந்து செயல்படுத்த லண்டனிலிருந்து பழமை மிகுந்ததும் கவனத்துக்குரியது மான தொழில்நுட்பம் சார் கண்டுபிடிப்புகளை உபகரணங்களை இலங்கைக்கு கொண்டு வந்து இலங்கையின் முதல் தொழில்நுட்ப நூதனசாலை ஒன்றை அமைக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் இதற்கு முன்னோடியாக பல மில்லியன் ரூபாய் பெருமதியான நூதனசாலை குரிய பொருட்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன மேலும் சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மூலமான பொருளாதார அபிவிருத்தி என்ற நோக்கங்களுக்கு அமைய நீர்வளத்துறை அமைச்சுடன் இணைந்து பலவித செயல்திட்டங்களும் அதற்குரிய முன்னோடி முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். புதிய கண்டுபிடிப்புகளுக்கான வளர்ச்சியகத்தின் மேலும் ஒரு குறிக்கோளான மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான வளர்ச்சியின் ஒரு அங்கமாக இதுவரை ரைசிங் லங்கா திருவிழா என்ற பெயரில் பிரம்மாண்டமான ஒரு நிகழ்வை நடாத்த நடாத்தி வருகின்றார்கள் இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக சில அங்கங்களாக மொழி மற்றும் மொழிப்புலமை தொடர்பான போட்டிகள் ஆக்கத்திறன் போட்டிகள் புத்தாக்க போட்டிகள் என்பன நடைபெற்று மிக பெறுமதி வாய்ந்த பரிசில்களும் வழங்கப்பட்டும் மேலும் அத்தோடு இந்நிகழ்வின் கலை நிகழ்வுகளில் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் முகமாகவும் பல்லின கலாச்சாரங்களை வேறுபாடுகளை கொண்டாடும் முகமாகவும் கண்கவர் நடன கலை நிகழ்ச்சிகளும் இலங்கையிலுள்ள சகல இனங்களினதும் பிரதிபலிப்பாய் இடம்பெறும் மேலும் அதோடு நின்றுவிடாமல் இந்நிகழ்வில் மிதிவண்டிகளின் பயன்பாட்டு விழிப்புணர்வு கருதுகோளோடு மிக பிரம்மாண்டமான மிதிவண்டி போட்டி ஒன்றையும் நடாத்தி மிக அதிகளவிலான பரிசில்களையும் வழங்கிவருகிறது இவ்வாறான தனது நோக்கங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் மேலும் தனது செயல்பாட்டை விரிவாக்க எண்ணி எமது இலக்கியத்துக்கு எமது கதைகளுக்கு வடிவம் கொடுப்பதோடு நீண்ட நாட்களாக வெளிவராதிருந்த சிரித்திரன் சஞ்சிகையை வெளியிட்டு வருகிறது.


ஆரம்பம் :

இந்நிறுவன செயல்பாடுகளில் மிக முக்கியமான இந்நிகழ்வில் இந்த சிறப்புமிகு கார்ட்டூன் சஞ்சிகை யாக்கம் பற்றி நாம் சிந்தித்து அதனுடன் தொடர்புபட்ட அடுத்த நிகழ்வுகளையும் கவனத்தில் எடுத்த போது இச் சஞ்சிகையுடன் அதன் ஆரம்ப காலந்தொட்டே தொடர்புபட்ட பல்வேறு நபர்கள் முன்நின்று இணைந்து இதனை சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு நல்கினர். இதனால் சந்தேகங்களும் பயமுமின்றி இதனை சிறப்பாக வெளியிட முடிந்தமை எமது சாதனைகளில் ஒன்றே.. மேலும் அதற்கு மகுடம் வைத்தாற்போல் சிரித்திரன் சுந்தர் அவர்களின் புதல்வியார் வாணி சுந்தர் அவர்கள் எமக்கு பூரண ஒத்துழைப்பு நல்கி இன்றும் எமது வழிகாட்டியாக முன்னின்று செயற்படுகின்றார்.


சிரித்திரன் :

சிரித்திரன் இதழ் 1963ஆம் ஆண்டில் சி. சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவைக்கான இதழ். அவர் மறையும்வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து இடையறாது வெளிவந்து சாதனை படைத்தது. சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புகளாலும் ஈழத்துத் தமிழிலக்கியத்தில் சிரித்திரன் சஞ்சிகை தனக்கென தனியிடத்தை நிலைநிறுத்தியது . 'மகுடி பதில்கள்' என்று சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் அதன் சமகால பத்திரிகை உலகில் பலராலும் விவாதிக்கப்பட்டது.

ஜன ரஞ்சகமும், அரசியல் பகடியும் , சமூக அக்கறையும் கொண்டு சமகாலத்தின் குரலாக தனது பங்களிப்பை சுந்தரம் தந்திருக்கிறார். 1960 களில் இது ஈழத்தின் யாழ்ப்பாண சிரித்திரன் அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. சிரித்திரனின் அன்றைய வெளியீட்டை பற்றி குறிப்பிட்டு சொல்லக் கூடிய விடயத்தில் முக்கியமான ஒன்று இது தமிழ்நாடு வரையில் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது. நீண்ட பாரம்பரியம் கொண்டிருந்த நிறுவனங்களும் , இதழ்களும் , நூல்களும் கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் நமது சிரித்திரன் விரும்பி வாங்கப்பட்டு இருந்ததும் , முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெருவிருப்ப நூல் தொகுப்பினுள் பங்கேற்றுக் கொண்டதும் நாம் இன்றுவரை பெருமை கொள்ள கூடிய நினைவுகள் ஆகும்.


சிரித்திரனின் பொற்தகட்டு பக்கங்கள் :

உலக அளவில் போர்க்காலங்களில் வெளியான இதழ்களில் கூட கார்டூன் சித்திரத்தின் பங்கு அதிகமானது. சொல்லால் ஒரு எதிப்பை சொல்வதைவிட காட்சிமொழியாக அதுவும் கார்ட்டூன் சித்திரமாக ஒன்று வெகுஜனங்களிடம் சென்று சேரும்போது அதன் பாதிப்பென்பது மிக அதிக அளவிலானது. அரசியல் சினிமா என சகல துறைகளிலும் இந்தக் கார்ட்டூன் சித்திரங்களின் பங்களிப்புக்கு தனி இடம் உண்டு . அந்தவகையில் ஈழத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் அதன்மூலமாக சமூகத்துடன் உரையாடுதல் போன்றவற்றிற்கு சிரித்திரதான் முன்னோடியான இதழ்‌.

அதே சமயம் சிரித்திரன் சஞ்சிகை மூலம் பல புதிய இளம் எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். வெறும் நகைச்சுவை உணர்வு மட்டுமே இல்லாமல் வேறு பல தீவிரமான தளங்களுக்கான சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிந்தனையைளவிலும் பண்பாட்டளவிலும் கலைரீதியாகவும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர்.

திக்கவயல் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் ஆரம்பகால எழுத்தாளர்கள். காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த "மாத்திரைக் கதைகள்" பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா "நடுநிசி" என்ற மர்மக்கதையை எழுதினார். மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் போன்றவை இவற்றுள் சில. எஸ். அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் இப்படிப் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார் சுந்தர். மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" அன்றைய அரசியல்வாதிகளிடையே சர்ச்சைகளையும் பீதியையும் உண்டாக்கியது ‌. செங்கை ஆழியானின் "ஆச்சி பயணம் போகிறாள்", "கொத்தியின் காதல்" ஆகியன புகழ் பெற்றவை.


இன்று… :

சிரித்திரன் என்ற இதழைப்பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல், அவ்விதழ் எதனை களமாகக் கொண்டது என்பதெல்லாம் தெரியாமல் வாசிக்க தொடங்கும் ஒவ்வொருவருக்கும் கூட இந்த புதிய தொடக்கம் நிச்சயமாக புத்துணர்ச்சி தரும் வகையில் இருக்கும்.. மேலும் நமது சிரித்திரனோ என எண்ணும்படி வரும் பழைய வாசகர்களுக்கும் ஏமாற்றமளிக்காது புத்தகத்தின் நோக்கமும் தலைப்பும் மாறாது, சிறப்பாக அமைந்த அட்டைப்படமும், வடிவமைப்பும் கொண்டு இது மேலும் ஆக்கமும், அழகும் மிகுந்து சர்வதேச தரத்தில் இருக்கக் கூடிய வகையில் கடினமான உழைப்புடன் வெளியிட முயல்கிறன்றோம்.... ஆனால் அது பனிப்பாறையின் நுனி மட்டுமே. உள்ளே இருப்பது உங்களில் பலரின் கூட்டு சேர்ந்த மகா முயற்சி..

ஈழமணித்திருநாட்டின் கதைகளை , கவிதைகளை, அரசியலை , அவலத்தை தார்மீகமான ஜனநாயகத்தின் பாற்பட்டு அச்சில் வார்த்து பதிப்பிக்கும் இதழ்தான் சிரித்திரன். தமிழ், தலைவர்கள் , உலக அரசியல் , விஞ்ஞானம், சோதிடம் என்று பலதுறைகளின் நிலங்களில் கால்பாவி வாசகர்களின் மனதையும் அறிவையும் விசாலப்படுத்துகிறது சிரித்திரன்.


கருத்துரை :.

ஒரு புத்தகத்தின் ஒரே ஒரு வரிகூட ஒருவரை வேறருலராக பரிணமிக்க வைக்கக் கூடிய வல்லமை கொண்டது . அதுவும் குழந்தைகளின் விசயத்தில் சொற்களின் பாதிப்பு என்பது ஆழமான விளைவுகளை உண்டாக்கக்கூடியது. அவர்கள் அறிவார்ந்தவர்களாக பண்பட்டவர்களாக அரசியல் தெளிவும் கொண்டு சமூகப்பிரக்ஞை உள்ளவராக வளர்ந்துவர இந்த மாதிரியான இதழ்களின் பங்களிப்பு அவசியம்.

இதழின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அழகான ஒலிப்பதிவில் podcast மாற்றல் சிறப்பு என்று கருதி, அதற்கான ஆயத்த வேலைகளையும் தொடங்கி இருக்கின்றோம். பாகுபாடின்றி அனைவருக்கும் அறிவின் வெளிச்சம் சென்று சேரவேண்டுமென்பதில் உறுதியாகவும் இருக்கிறோம்..வீட்டிற்கொரு நூலகம் வேண்டும் என்பதோடு அதற்கான வழிமுறைகளையும் அறிஞர் அண்ணா சொல்லியிருப்பார். அதில் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகங்கள் பற்றியும் சொல்லியிருப்பார். அப்பட்டியலில் மாதாந்த சிரித்திரனை சேர்த்துக் கொள்வதும், பழைய சிரித்திரன் பிரதிகளை சேர்த்துக் கொள்ளலும் எமது மொழிக்கும், அது சார்ந்த நடவடிக்கைகும் எடுத்துக்க காட்டாக காட்டக்கூடிய அறிவார்ந்த விசயமாகும்.

சங்கம் வைத்து மொழி வளர்த்த நம் முன்னோர்கள் மரபில் மொழியும் கலையும் சிறு நகைப்பும் இயல்பு கூடி கருத்தூண் பரிணாமத்திற்கு வித்திட்ட இதழ் சிரித்திரன்..


சிரித்திரன் இதழுக்கு உங்கள் பங்களிப்பை வழங்க...