ஆசிரியப் பணியில் இருந்த ஆறுதிருமுருகனை ஆன்மிகப்பணியை நோக்கி ஈர்த்த விடயம் என்ன?


ஆசிரியப் பணியில் இருந்த ஆறுதிருமுருகனை ஆன்மிகப்பணியை நோக்கி ஈர்த்த விடயம் என்ன?


சிறு பராயம் முதல் ஆன்மீக நாட்டத்தை பெற்றோர் எனக்கு தந்திருந்தார்கள். பிறவியிலேயே நாங்கள் மாமிசம் உண்பதில்லை. கோயில்களில் நாட்டம் மிகுந்த காலத்தில் ஆன்மீகம் குடும்பத்தில் இயல்பாக இருந்தது. அந்த நேரம் நான் பல சமூகப்பணிகளையும் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது என்னவென்றால் போராட்டம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். 1987-ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டுக் காயங்களுடன் குற்றுயிராக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது என் மனதில் ஒரு தீர்மானம் எடுத்தேன். நான் தற்செயலாக உயிரோடு இருக்க நேர்ந்தால் என்னுடைய வாழ்வைச் சமூகத்தில் சமூகத்திற்காக அர்ப்பணிப்பதாக எண்ணி இருந்தேன். அதுதான் என்னைத் தற்போதும் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. மரணப்படுக்கையில் நான் எடுத்த முடிவென்றே இதனைச் சொல்லலாம்.

முப்பதற்கும் மேற்பட்ட பணிகளை நிர்வகித்தவாறு சுறுசுறுப்பாக இயங்குகின்ற ரகசியம் என்ன?
ஒரு திட்டத்தை அல்லது செயற்பாட்டை முன்னெடுப்பதாக இருந்தால் என்னை பரிபூரணமாக அதற்கு ஒப்பித்து விடுவேன். நேரகாலம் பார்க்காது உழைப்பேன். குறிப்பாகப் பணத்தை வைத்துச் செய்யாமல் மனத்தை வைத்துச் செய்ததால் அவை வெற்றியை நோக்கிப் போகும் எனலாம். நான் விரும்புகின்ற நல்ல காரியத்தை நல்ல முறையில் மனதிலேயே திட்டமிட வேண்டும். மனம் அதை நோக்கிச் செல்கின்ற போது தனது வெற்றியைத் தேடி தரும்.


தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி?
அவர் எனக்கு ஒரு ஞானகுரு. அவர்கள் என்னோடு நட்பாக இருந்தார்கள். கிட்டத்தட்ட அவர்கள் எனது குடும்பத்தாருடன் 50 வருட பழக்கம். என்னுடைய பேச்சாற்றலைக் கண்டு தன்னை வந்து  சந்திக்
கும்படி கேட்டிருந்தார். அவருடன் 1993 ஆம் ஆண்டிலிருந்து அவருடைய “அறநெறிச் சபையிலே” இருந்தேன். பின்னர் இடம்பெயர்ந்த காலத்தில்; தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலை நிர்வகிப்பதற்கு என்னை அதில் இணைத்தார்கள். படிப்படியாக அவருடைய நிர்வாகத்தில் 14 ஆண்டுகள் அவரிடம் பயிற்சி பெற்று நிர்வாகத்தில் இருந்து வருகிறேன். 2008 ஆம் ஆண்டு அவர் இறந்தபின்னர் அதன் பொறுப்பை ஏற்று நடத்துகிறேன். இதற்கு அம்மா தந்த பயிற்சிதான் காரணம்.

இன்றைய சூழலில் இந்து தர்மம் எப்படியுள்ளது? அதை நிகழ்த்துவதில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன?


உண்மையிலேயே இந்து தர்மம் என்பது அகலமானது; ஆழமானது; எல்லை இல்லாதது. இந்துக்களுக்கு ஒரு பரந்த நோக்கம் இருக்க வேண்டும். காரணம் இந்து சமயத்தைப் பொறுத்தவரை வெறுமனே சடங்கு சம்பிரதாயங்கள் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது மனிதாபிமானத்திற்கு ஜீவகாருண்யங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவோமேயானால் சடங்கு சம்பிரதாயங்களின் 
உண்மைத் தன்மையும் விளங்கும். வெறுமனே சடங்குகளை சடங்குகளோடு நிறுத்தாமல் எல்லா உயிர்களிடத்தும் கடவுளை காண்பது தான் இந்து சமயத்தின் நோக்கம். இன்று அந்தச் சமயத்தின் வாழ்வியல் உட்பொருளை விளங்கிக் கொள்பவர்கள் மிகக்குறைவு. எல்லோரும் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்குப் பொருளீட்டுவது போன்று அவசர தேவைகளுக்குக் கடவுளை நாடுகிறார்கள். பொது
வெளியில் அன்பு வளரவில்லை.

இறைபணி, இலக்கியப்பணி, சமூகப்பணி எதில் ஆறு. திருமுருகனை 
அடையாளப்படுத்தும் போது பிடித்துப் போகிறது?

மூன்று பணிகளும் என்னோடு கூடிப்பிறந்தவை. நான் படிக்கின்ற காலத்திலேயே மேடையேறி பேச ஆரம்பித்தவன். அதே போல எழுத்துத் துறையிலும் எனக்கு ஆர்வம் இருந்தது. இயல்பாகப் பேச்சுத்துறை என்னோடு கூடுதலாக அமைந்தது. இன்றைக்கு எனது ஆன்மீக பணிக்காக எனது பேச்சுத்திறனைச் சொற்பொழிவாக பயன்படுத்துகின்றேன். நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு நாவன்மை எனக்குக் கை கொடுக்கிறது. என்னைப் பொறுத்தவரை இலக்கியம், சமயம், சமூகம் என்ற மூன்றும் என்னோடு ஒன்றிப் பிறந்ததால் எனக்கு அதில் ஓரளவு வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.


நாய்களுக்கான சரணாலயம் அமைத்த வித்தியாசமான உயர் சிந்தனை வடிவம் எவ்வாறு தோன்றியது?
தவத்திரு யோகர் சுவாமிகளின் 50ஆவது குருபூசைத் தினம் வந்தது. யாழ்ப்பாணத்திலே வீடுகளிலே நாய் குட்டி போட்டால் சந்தைகளிலும் வீதிகளிலும் விட்டுச் செல்வது வழக்கம். இதை அவதானித்த யோகர் 
சுவாமிகள் இந்தக் “கருமம்” இருக்கும் வரைக்கும் உங்களின் துன்ப துயரங்கள் தீராது என்று சொல்லியிருக்கிறார்கள். யோகர் சுவாமிகள் சமாதி அடைந்து 50 வருடங்கள் ஆகிவிட்டன. நாங்கள் இன்னும் அதே தவறைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு தடவை யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை மருத்துவர் பேரானந்தராஜா அவர்களுடன் பேசும்போது கட்டாக்காலி நாய்களால்; மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் பற்றிக் கூறினார். இதனை உரியவர்களிடம் பேசி இதற்கு தாங்கள் ஒரு முடிவு பெற்றுத் தருமாறு என்னிடம் கேட்டார். அதற்காகத்தான் நான் நாய்கள் காப்பகம் அமைக்க நேர்ந்தது. இதற்கு ஆரம்ப காலங்களில் எவரிடமிருந்தும் எந்தவிதமான ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை. பல்வேறு விமர்சனங்களும், சிரமங்களும், பிரச்சினைகளும் தான் வருகிறது ஆனாலும் அதனைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறேன். முழுமையாக வெற்றி அடைந்தது என்றில்லை. ஆனாலும் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆன்மிகம் மற்றும் அவை தவிர்ந்த பலவற்றை உருவாக்கியுள்ளீர்கள். இதில் உங்களை ஆத்ம திருப்தி அடைய வைத்தது எது?


மாற்றுவலு உள்ள பிள்ளைகளுக்கு ஒரு பாடசாலை அமைத்ததால் படித்தவர்கள் மத்தியில் கூட விமர்சனங்கள் இருந்தன. அவர்களுக்கான பாடசாலையை விடாப்பிடியாக ஆரம்பித்தேன். சர்வதேச மாற்றுவலு உள்ளவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு மாணவர்கள் தெரிவாகி கிரிஸ் நாட்டின் எதேன்ஸ் நகரில் நடந்த போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிவெண்கலப்பதக்கம் பெற்றுக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலை
யத்தில் இறங்கும் போது வழங்கப்பட்ட செங்கம்பள வரவேற்பின் போது நான் அடைந்த பூரிப்பிற்கு நிகர் இல்லை. தொடர்ந்து மூன்று தடவைகள் ஆசிய பசுபிக் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றுப் பதக்கம் பெற்றனர். இந்தப் பாடசாலை ஆரம்பிக்கும் போது மிகக் கடுமையாகக் கஸ்டப்பட்டுத்தான் அமைத்தேன். ஆனால் அது உச்ச புள்ளிகள் பெற்றுச் சமூகம் நோக்கிய பயணத்தில் ஒரு பெரிய மைல்கல்லைத் தொடுகிற போது ஏற்பட்ட மகிழ்ச்சி அளவற்றது.

ஈழ புலம்பெயர் மக்களின் இந்து கலாசார மேம்பாடு எவ்வாறு உள்ளது?

புலம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய இருப்பிடத்தை விட்டு சென்ற கவலை அவர்களிடம் இருக்கிறது. வீடு, கோயில், வழிபாடு என எல்லாவற்றையும் இழந்து இருக்கிறார்கள். ஆக அதை நிவர்த்தி செய்ய எல்லா இடத்திலுமே கோவில்களை அமைத்து  இருக்கிறார்கள். ஆரம்பித்திலே வழிபாட்டுக்காக மாத்திரம் கோயில்களை நிறுவியவர்கள் தங்களுக்குள்ளான போட்டி மனப்பான்மை காரணமாக ஏகப்பட்ட 
கோயில்களை சிலர் உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் சில கோயில்கள் அங்குள்ள மக்களை ஆற்றுப்படுத்தியுள்ளது. தாயகத்திலிருந்து கோயில்களில் தங்களுடைய பணிகளை மேற்கொண்டாலும் சிலர் இச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. ஓரளவு அங்கு உள்ள கோயில்களில் பிற நாடுகளில் சமய வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அடுத்த தலைமுறையினரை கோயில்களில் ஈடுபடவைப்பதில் வெற்றிபெறவில்லை. அடுத்த தலைமுறையினர் சமயங்களைக் கையாளுவதற்கான சிறந்த ஒழுங்குகள் புலம்பெயர் நாடுகளில் வெற்றியளிக்கவில்லை.

தங்களால் நிர்வகிக்கப்படும் பல்வேறு சமூக நிறுவனங்களானது எதிர்வரும் காலங்களிலும் நீடித்து இயங்க நீங்கள் என்ன மாதிரியான திட்டமிடல் செய்துள்ளீர்கள்?


எங்களால் உருவாக்கப்பட்ட பாடசாலைகள், மடங்கள், முதியோர் இல்லங்கள் என்பவற்றை நடாத்துவதற்குப் பெரியளவில் தென்னந் தோட்டங்கள் வருவாயைப் பெறக்கூடியதாக மூன்று இடத்தில் உருவாக்கியிருக்கி
றோம். அதே நேரம் வயல் விதைக்கிறோம்.  எங்களுடைய நிறுவனத்திற்கான உணவுத் தேவைகளை எங்களுடைய உற்பத்திகளிலிருந்து பெற்றுக் கொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். சிவபூமி பஞ்சாமிர்தத் தோட்டம். சிவபூமி அன்னத்தோட்டம், சிவபூமி அன்னப்பூரணித் தோட்டம் என்பவற்றை வைத்திருக்கிறோம். சுழிபுரத்தில் ஐந்நூறு தென்னைகளைக் கொண்ட தோட்டம் மயிலிட்டியில் வாழைத்தோட்டம் எனப்பல உருவாக்கியிருக்கிறோம். என்னுடைய சிந்தனை எதிர்காலத்தில் புலம்பெயர் தேசங்களை முழுமையாக நம்பியிராமல் எங்களுக்குப் பின்னர் இதனை நடாத்தப்போகின்றவர்கள் எங்களுடைய நிலபுலன்
களில் பெறும் வருமானத்தை வைத்துக் கொண்டு செயற்படுத்த வேண்டும். இதற்காக நிலங்களை அன்பளிப்பாகவும் பணம் கொடுத்தும் பெற்று விவசாய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.